Thursday, January 31, 2019

அருகம்புல் - Arugampul மருத்துவப் பயன்கள்







அருகம்புல்


வளரியல்பு: சிறுசெடி, புல் வகையைச் சார்ந்தது.


தாவர விளக்கம்: பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வளர்கின்றது. அருகு, பதம், தூர்வை, மேகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

 முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.


வெள்ளைபடுதல் தீர

Ø  அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வர வேண்டும்.


சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாக

Ø  தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.


மூலம், இரத்த மூலம் கட்டுப்பட

Ø  அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து, 200 மி.லி. காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, காலை வேளையில் மட்டும் குடித்து வர வேண்டும். இரண்டு வாரங்கள் இவ்வாறு செய்யலாம்.


நரம்புத் தளர்ச்சி கட்டுப்பட

Ø  ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம்புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை  இவ்வாறு செய்யலாம்.


வெட்டை நோய் குணமாக

Ø  எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து, காலை வேளையில் குடிக்க வேண்டும். 10 நாட்கள் வரை இவ்வாறு தொடர்ந்து குடிக்க வேண்டும்.


வயிற்றுப்புண் குணமாக

Ø  அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., ½ தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும்.


Ø மருத்துவத்தில் உபயோகிப்பதற்கான அருகம்புல் சுத்தமான வாழிடத்திலிருந்து மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும். தொடர்ந்து அருகம்புல் கியாழம் அல்லது சாறு சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் கண் பார்வையும் தெளிவடையும். அருகம்புல்லின் இலைப் பச்சையத்தில் உள்ள அபரிமிதமான கரோட்டினாய்டுகளால் இவ்வாறு இது உபயோகமாகின்றது. அருகம்புல் பசையை வெட்டுக் காயங்களின் மீது பூசி வர அவை விரைவில் குணமாகும். விநாயகர் வழிபாட்டிற்கு அருகம்புல் உகந்ததாக நமது நாட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.

Please Contact for Appointment