ஏலம்
வளரியல்பு: செடிகள், புதர்ச்செடி அமைப்பிலும் காணப்படும்.
தாவர விளக்கம்: அடர்த்தியான, சதைப்பற்றுடைய மட்டநிலத் தண்டுக்கிழங்குகளைக் கொண்ட தாவரம், 3 மீட்டர் வரை உயரமான நிமிர்ந்த தண்டுகளைக் கொண்டது. இலைகள் 3 அடி வரை நீளமானவை, அகலத்தில் குறுகியவை. இலையின் நடு நரம்பு மிகவும் வலிமையானது. இரண்டரை அடி வரை உயரமான மலர் கொத்துக்கள் தண்டின் அடியிலிருந்து உருவாகின்றன. மலர்கள் 4 செ.மீ. வரை நீளமானவை, வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறமானவை. பழங்கள் 1.5 செ.மீ. நீளத்தில், வெளிறிய பசுமை நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் நீள்வட்ட வடிவில், 3 பிரிவுகளுடன் பல விதைகளுடன் காணப்படும். மலைப்பகுதிகளில் இயற்கையாக விளைகின்றது. ஏலக்காய், ஆஞ்சி, துடி, சிற்றேலம் ஆகிய மாற்றுப் பெயர்கள் இதற்கு உண்டு. மழைக்காடுகள், மைசூர் மற்றும் கேரளத்தில் அதிகமாக விளைகின்றது. முதிர்ந்த காய்கள், உள்ளிருக்கும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. ஏலக்காய், ஏலரிசி போன்றவை நாட்டு மருந்துக் கடைகளிலும், ஏலக்காய் மளிகைக் கடையிலும் கிடைக்கும். ஏலக்காய் வெவ்வேறு நிலப்பகுதிகள், மற்றும் அதன் சூழ்நிலை தகவமைப்பிற்கும் ஏற்ப சிறு மாறுபாடுகளுடன் காணப்படுகின்றது. ஏலம் கடைகளில் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் கந்தகப் புகை அடிக்கப்பட்டு வெள்ளை நிறமாக்கப்படுகின்றது. கெட்டியான காய்களில் விதை கருப்பாக, அதிகமான எண்ணிக்கையில் இருக்கும்.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
ஏலம், கார்ப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். விந்துவைப் பெருக்கும்; காமத்தை தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது. மலமிளக்கும் மருந்துகளுடன் இவை சேர்க்கப்படுகின்றன. ஆண்மைவிருத்தி லேகியங்களிலும் சேர்க்கப்படுகின்றது. மணம், சுவைக் கூட்டும் தன்மை இதற்கு மிகுதியாக உண்டு. கேக்குகள், மிட்டாய்கள், இனிப்புகள் ஆகியவற்றிலும், உணவு சமைப்பதிலும் ஏலக்காய் பெருமளவு சேர்கின்றது. விதையின் எண்ணெய் பல மருந்துப் பொருட்களிலும் சேர்கின்றது மற்றும் பானங்களை வாசனையுள்ளதாக மாற்றுகின்றது.
செரியாமை தீர
Ø ஏலரிசி, ஓமம், சீரகம் இவை சம அளவில் எடுத்துக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து, பொடி செய்துக் கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும்.
வயிற்றுவலி குணமாக
Ø
ஏலரிசி, சீரகம், சுக்கு கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி தீர
Ø
ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை நன்கு காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு தூளை தேவையான அளவு எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து, ஒவ்வொரு வேளை உணவிற்குப் பின்னரும், தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.