எள்
வளரியல்பு : சிறுசெடி.
தாவர விளக்கம்: இந்தியாவில் எராளமாகப் பயிரிடப்படுகின்ற செடி. திலம் என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. எள்ளிலிருந்து வடிக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படுகின்றது. உணவிற்கான எண்ணெயாக இது பலவிதங்களில் பயன்படுகின்றது. இந்த எண்ணெயில் காரமோ, கசப்போ, இனிப்போ, துவர்ப்போ எது கலந்தாலும் இனிய சுவை தரும். எண்ணெய் குளியிலில் நல்லெண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது. உடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது. இவை பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
மருத்துவப் பயன்கள் மற்றும் முறைகள்
முழுத் தாவரமும், இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சியகற்றும்; எள்ளில் அதன் விதையின் நிறத்தை கொண்டு, வெள்ளை, கருமை மற்றும் சிவப்பு எள் வகைகள் உண்டு. ருதுவுண்டாக்கும் வெப்பமுண்டாக்கும்; உடல் உரமாக்கும்; சிறுநீர் பெருக்கும்; பால் பெருக்கும்; மலமிளக்கும். காலையில் ஒருபிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாக பண்டைக்கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. பூ, கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு” என்கிற பழமொழி இன்றும் வழக்கத்தில் உள்ளது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பை அதிகப்படுத்த
Ø 5 கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.
கண் சிவப்பு, கண்வலி குறைய
Ø எள் எண்ணெயை (நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர வேண்டும்.
கண் பார்வை தெளிவடைய
Ø எள்ளுப்பூவை நெய்யில் வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.
கட்டிகள் உடைய
Ø இலையை நெய்யில் வதக்கி, கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.
எச்சரிக்கை: மகளிர் தங்களது கர்ப்ப காலத்தில் அதிக அளவு எள் சாப்பிடுவது கருச்சிதைவைத் தூண்டும். பழங்காலத்தில் இது ஒரு இயற்கையான கருத்தடை முறையாகவும் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.